தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Tuesday, June 21, 2011

அறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள்: பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியப் பதிப்புகள்



இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச்சமூகத்தில் தொல்காப்பியம் என்ற ஓர் இலக்கணப்பிரதி நிகழ்த்திய ஊடாட்டம் என்பது சாதாரணமானதல்ல. பிற்காலங்களில் தோன்றிய பல்வேறு இலக்கணப் பிரதிகளுக்கும் தொல்காப்பியம் ஒரு முதன்மைப் பிரதியாக நின்று அவையனைத்திலும் தன் தாக்கத்தை நிலை நிறுத்திக்கொண்டது.

தொல்காப்பியத்திற்குப் பிறகு பல்வேறு இலக்கணப்பிரதிகள் இங்குத் தோன்றியுள்ளன. அப்பிரதிகள் அதனதன் தன்மையில் சிறப்பாக நிலைபெற்றிருந்த போதிலும் தொல்காப்பியத்தோடு அவற்றை ஒப்பவைத்து எண்ணும்போது அவற்றின் விழுமியங்கள் மாறுபடவேச் செய்கின்றன. தமிழ்ச்சமூகத்தின் தொன்மை மரபின் ஆணிவேராக இன்று மையம் பெற்றுள்ள தொல்காப்பியம் ஒரு செறிவான தன்மைக்குள் கட்டப்பட்டுப் பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்திருந்த போதிலும் அப்பிரதியின் தெளிவான காலத்தையும் சமயத்தையும் அறுதியிட்டு வரையறை செய்யமுடியவில்லை.

இருந்தபோதிலும் தொல்காப்பியம் இத்தனை நூற்றாண்டுகள் நிலைபெற அதன் திட்டமிட்ட முறையியலான ஒழுங்கமைவு மற்றும் செய்நேர்த்தி, எல்லாக் காலத்திற்குமான பொருத்தப்பாடு, பல்வேறு காலங்களில் எழுந்த பலப்பல உரைகள், முதனூல் வழிநூல் என்ற மரபில் பிற்கால இலக்கணங்களுக்கு முதனூலாக நின்றமைதல், சமயச்சார்பின்மை ஆகிய அனைத்தும் மிகமுக்கியக் காரணங்களாக அமைகின்றன.

நீண்ட நெடுங்காலமாகச் சுவடிகளிலும் அறிஞர்களின் சிந்தனை மரபிலும் பயணித்த தொல்காப்பியம் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் அச்சில் நிலைபெற்றது. தமிழ்ப்பதிப்பு வரலாற்றின்தொடக்கக் காலமாக அமையும் இந்நூற்றாண்டில்தான் சுவடிகளில் எஞ்சியும் ஆங்காங்கே சிதறியும் கிடந்த தமிழின் தொன்மை இலக்கண இலக்கியங்கள் பலவும் அச்சாக்கம் பெற்றன. அவ்வகையில் தமிழின், தமிழரின் அடையாளமாகப் போற்றப்படுகின்ற தொல்காப்பியம் 19ஆம்நூற்றாண்டில் அச்சான முறைமையினை ஒரு சிறு விவாதக்களத்திற்குள் கொண்டுவரவே இக்கட்டுரை எத்தனிக்கின்றது

கி.பி.11 தொடங்கி கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை தொல்காப்பியத்திற்கு ஏழு உரைகள் கிடைத்துள்ளன. அவற்றை எழுதியவர்கள் இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர், கல்லாடர், பெயரறியப்படாதஉரைகாரர் ஆகியோராவர்.

இவ்வுரையாசிரியர்களில் நால்வரின் உரைகள் மட்டுமே 19ஆம் நூற்றாண்டில் அச்சாயின. அவை இளம்பூரணர் எழுத்ததிகார உரை, சேனாவரையர் சொல்லதிகார உரை, நச்சினார்க்கினியர் எழுத்து, சொல், பொருள் முதல் ஐந்து இயல்கள் உரை, பேராசிரியர் பின்னான்கு இயல்கள் உரை ஆகும்.

பதிப்புகளும் காலவரிசை முறையும்:

1.     தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, மழைவை மகாலிங்கையர் (ப-ர்), கல்விக்கடல் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1847.

2.    தொல்காப்பிய நன்னூல் மூலம், இ. சாமுவேல்பிள்ளை - வால்ற்றர் ஜாயீஸ் (ப-ர், கிறிஸ்து மதக்கியான விளக்கச் சங்கத்தார் அச்சுக்கூடம், சென்னை, 1858
.
3.    தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, சி.வை. தாமோதரம் பிள்ளை (ப-ர்), நல்லூர் ஆறுமுகநாவலர் பரிசோதனை செய்தது, கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1868, புரட்டாசிமாதம்

4.  தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, கோமளபுரம் இராச கோபாலபிள்ளை (ப-ர்), வர்த்தமான தரங்கிணீசாகை அச்சுக்கூடம், சென்னை, 1868, கார்த்திகை மாதம்

5.   தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார் (ப-ர்), அத்திநீயம் அன்ட் டேலி நியூஸ்பிரான்ச் அச்சுக்கூடம், சென்னை, 1868, கார்த்திகை மாதம்

6.   தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியார் உரை, சி.வை. தாமோதரம் பிள்ளை (ப-ர்), ஸ்காட்டிஷ் பிரஸ், சென்னை, 1885

7.    தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, சி.வை. தாமோதரம் பிள்ளை (ப-ர்), நல்லூர் ஆறுமுகநாவலர் பரிசோதனை செய்தது, வித்தியாநு பாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1886, (எண்-3இன் மறுபதிப்பு)

8.   தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியார் உரை, சி.வை.தாமோதரம் பிள்ளை (ப-ர்), வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1891, (எண்-1 இன் மறுபதிப்பு)

9.  தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியார் உரை,(சி.வை.தாமோதரம் பிள்ளை      
    (ப-ர்), விக்டோரியா ஜூபிலியந்திர சாலை, சென்னபட்டணம், 1892..


மேற்சொல்லப்பட்ட ஒன்பது பதிப்புகளில் உரையோடு கூடிய முதற்பதிப்புகள் ஆறு, ஒப்பீட்டுப் பதிப்பு ஒன்று, மறுபதிப்புகள் இரண்டு ஆகும். இவ்வாறமைந்த இப்பதிப்பு களில் தொல்காப்பியத்தின் முதல்பதிப்பாக விளங்குவது 1847இல் வெளிவந்த மழைவை மகாலிங்கையரின் பதிப்பே ஆகும். எவ்விதப் பதிப்பு நெறிமுறை களுமின்றி உரைநடை வடிவிலேயே அமைந்த இப்பதிப்பு காலத்தால் முந்தியது என்றாலும் ஆய்வாளர்களின் மாணவர்களின் பயன்பாட்டிற்கு இன்று பயன்படத்தக்க வகையில் இல்லை. இருந்தபோதிலும் இப்பதிப்பு நமக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பதிப்பாக விளங்குகின்றது. இதே பதிப்பை 1891இல் சி.வை.தாமோதரம் பிள்ளை மறுபதிப்பாக வெளியிட்டார்.ஒரு முறையாயினும் பிறர் பிரசுரித்த நூல்களை மீள அச்சிடுவிக்காத எனக்கு இவ்வெழுத்ததிகாரம் ஒரு விலக்காயிற்று’ (பதிப்புரை) என்று எழுதும் சி.வை.தா. மகாலிங்கையரின் பதிப்பிலிருந்து மாறுபட்டுச் சில பதிப்பு நுணுக்கங்களைக் கையாண்டு இதனை வெளியிட்டுள்ளார். இதற்குக் காரணம் காலஇடைவெளியே ஆகும். பதிப்பு நெறிமுறைகள் வளர்ச்சிபெற்ற காலத்தில் சி.வை.தா.வின் இப்பதிப்பு அதற்கான தன்மைகளோடு அமைந்திருப்பது அதன் சிறப்பு ஆகும்.

மழைவை மகாலிங்கையரின் பதிப்பைத் தொடர்ந்து 1858ஆம் ஆண்டு சாமுவேல் பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ் என்பவர் உதவியுடன் தொல்காப்பிய மூலம் முழுவதையும் நன்னூல் மூலத்தோடு ஒப்பிட்டு தொல்காப்பிய நன்னூல்என்ற தலைப்பில் ஒரு பதிப்பை வெளியிட்டார். இப்பதிப்பு தொல்காப்பிய நன்னூல் ஒப்பீட்டிற்கு முதற்பதிப்பாக அமைவதோடு தொல்காப்பியம் மூலம் முழுவதையும் முதன்முதலாகவும் கொண்டமைகின்றது. தமிழ்ப்பதிப்பு வரலாற்றில் முதல் ஒப்பீட்டுப் பதிப்பாகவும் இப்பதிப்பு விளங்குகின்றது.

இதனைத் தொடர்ந்து 1868ஆம் ஆண்டு மட்டும் தொல்காப்பியத்திற்கு மூன்று பதிப்புகள் வெளிவந்தன. சொல்லதிகாரம் சேனாவரையத்தைச் சி.வை.தா. மற்றும் இராசகோபாலபிள்ளையும் எழுத்ததிகாரம் இளம்பூரணத்தைச் சுப்பராயச் செட்டியாரும் பதிப்பித்திருந்தனர். சி.வை.தா. 1868 புரட்டாசி மாதம் தன் சேனாவரையப் பதிப்பை வெளியிட இரண்டு மாதம் கழித்து அதாவது கார்த்திகை மாதம் இராசகோபாலபிள்ளை சேனாவரையருக்கு மற்றொரு பதிப்பை வெளிக் கொணர்ந்தார். இரண்டு மாத இடைவெளிகளில் ஒரே உரையை இருவர் பதிப்பித்ததற்கான பின்புலம் குறித்து 17-9-1950 ஈழகேசரி ஞாயிறு பத்திரிகையில் சி. கணபதிப்பிள்ளை விரிவான தகவல்களோடு சுவையானதொரு விவாதத்தை நிகழ்த்தியுள்ளார். அப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையினைச் சி.வை.தா. பதிப்புரைகளின் தொகுப்பு’’ எனும் நூலில் பின்னிணைப்பாகத் தந்துள்ளனர்.

தொல்காப்பியத்திற்குக் கிடைத்தவற்றுள் முதல் உரையாகவும் காலத்தால் முந்திய உரையாகவும் இன்று நமக்கிருப்பது இளம்பூரணர் உரையே. தொல்காப்பியம் முழுமைக்கும் இவர் இயற்றிய உரையே இன்று பூரணமாய்க் கிடைக்கின்றது. இருந்தபோதிலும் 19ஆம் நூற்றாண்டில் இளம்பூரணரின் எழுத்ததிகார உரை மட்டுமே அச்சாக்கம் பெற்றது. மற்ற அதிகாரத்து உரைகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத் திலேயே பதிப்பிக்கப்பட்டன.சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார்என்பவர் 1868 கார்த்திகை மாதம் முதன்முதல் இளம்பூரணர் எழுத்ததிகார உரையை அச்சுக்குக் கொண்டுவந்தார். பாடவேறுபாடுகள் மற்றும் அடிக்குறிப்புகள் தரப்பட்டுப் பதிப்பிக்கப்பெற்ற இப்பதிப்பு இளம்பூரணர் உரையை முதன்முதல் அச்சுக்குக் கொண்டுவந்த சிறப்பைப் பெறுகிறது.
இதன்பின் 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் வெளிவந்த நான்கு தொல்காப்பியப் பதிப்புகளையும் வெளியிட்டவர் என்ற பெருமை சி.வை.தா. அவர்களையேச் சாரும். முறையே 1885, 1886, 1891, 1892 ஆகிய காலங்களில் வெளிவந்த பதிப்புகளில் இரண்டு மறுபதிப்புகள் (1886, 1891) ஆகும். இதில் சி.வை.தா. 1885ஆம் ஆண்டு பொருளதிகாரத்தினை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித் திருந்தார். பல்வேறு சுவடிகளை ஒப்புநோக்கி விரிவான பதிப்புரை எழுதப்பட்டு இப்பதிப்பு பதிப்பிக்கப்பட்டிருந்த போதிலும் முழுமையான நச்சினார்க்கினியர் உரையோடு கூடியதான பதிப்பாக  அமையவில்லை. இப்பதிப்பின் முதல் ஐந்து இயல்கள் மட்டுமே நச்சினார்க்கினியருடையது’, பின்னான்கு இயல்களும் பேராசிரியர் உரையாக இருந்தது. சி.வை.தா.வின் கவனத்திலிருந்து தவறிய இந்த உண்மையை ஆராய்ந்தறிந்து 1902 செந்தமிழ் இதழில் கட்டுரையாக வெளியிட்டவர் ரா. இராகவை யங்கார் அவர்களே.

1885ஆம் ஆண்டைத் தொடர்ந்து இரண்டு மறு பதிப்புகளை வெளியிட்டு அதன்பின் 1892ஆம் ஆண்டு தொல்.சொல். நச்சினார்க்கினியர் உரையைப் பதிப்பித்து வெளியிட்டார்.

இப்பதிப்பை இவர் வெளியிட்டதன் வழி 19ஆம் நூற்றாண்டில் தொல்காப்பிய நச்சினார்க்கினியர் உரையை (செய்யுளியல் தவிர) முழுமையாகப் பதிப்பித்த பெருமையைப் பெறுகின்றார். அதோடு தொல்காப்பியப் பதிப்பு வரலாற்றில் தனக்கான ஓர் இடத்தையும் நிலைநிறுத்திக் கொள்கிறார்.

இதுவரை சொல்லப்பட்ட 19ஆம் நூற்றாண்டுத் தொல்காப்பியப் பதிப்புகளின் மூலம் அக்காலப் பதிப்பியல் முறைமைகள் சிலவற்றை நாம் அறிய முடிகின்றது. 19 ஆம் நூற்றாண்டில் வெளிவந்த தொல்காப்பியப் பதிப்புகள் அனைத்தும் சுவடியிலிருந்தே பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சி.வை.தா.வின் ஒருசில பதிப்புகளைத் தவிர மற்ற எவற்றிலும் பதிப்புரையோ, விரிவான முன்னுரையோ தரப்படவில்லை. பதிப்புரை, முன்னுரை இல்லாத பதிப்புகளுக்கு அப்பதிப்புகளின் முகப்புப் பக்கங்களே பதிப்புரையாக நின்று பலவிதமான தரவுகளையும் தருகின்றன. தரவுகள் என்றால் நூல்பெயர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பதிப்பாளர், அச்சுக்கூடம், ஆண்டு ஆகியவை மட்டுமே தரப்பட்டிருக்கும். இவைதவிர அப்பதிப்பு எத்தனை சுவடிகளை ஒப்புநோக்கிப் பதிப்பிக்கப்பட்டது, சுவடிகளுக்கான விவரங்கள் போன்ற எவற்றையும் அறியமுடிவதில்லை. பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு’, ‘பல பிரதிரூபங்களைக் கொண்டுஎன முகப்புப் பக்கத்தில் வரும் இவ்வாக்கியங்களைத் தவிர அது எந்த தேசம், எச்சுவடி என்ற ஒருகுறிப்பையும் விளங்கிக்கொள்ள முடிவதில்லை.

விதிவிலக்காக 1885ஆம் ஆண்டு சி.வை.தா. தான் வெளியிட்ட தொல்காப்பியப் பொருளதிகார நச்சினார்க்கினியர் உரைப் பதிப்பில் ஒரு விரிவான பதிப்புரையினை எழுதியுள்ளார். இப்பதிப்புரையின் வழி சி.வை.தா. பல்வேறு அரிய தரவுகளைப் பதிவு செய்துள்ளார். 19ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியக் கல்வி நிலை இருந்த நிலைமையினை விளக்கிச் செல்வதோடு தாம் பதிப்பிக்கப் பயன்படுத்திய சுவடிகள் எண்ணிக்கை, அவை யார் யாரிடமிருந்து பெறப்பட்டன போன்ற செய்திகளையும் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியப் பதிப்புகளில் பல பிரதிரூபங்கள்என்ற தொடருக்கான விளக்கம் சி.வை.தா.வின் இந்தப்பதிப்புரை யிலிருந்தே பெறப்படுகின்றது. தனது பதிப்பு வெளிவர யார் பணம் தந்தார்களோ அவர்களது பெயரைப் பதிப்புரையில் சுட்டிச் செல்கிறார். தனது பதிப்பைப் பிழையில்லாமல் வெளியிட மிகுந்த சிரத்தையோடு செயல்பட்டுள்ளார். அதையும் மீறி பிழையோடு வெளிவந்துவிட்டால் அதைப்படிப்பவர்கள் அதில் உள்ள பிழைகளைக் கண்டுபிடித்துச் சொன்னார்களானால் திருத்தப்பட்ட ஒரு பிரதியினை இலவசமாக அவர்களுக்கு அனுப்பிவைக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். இதனை இவரின் 
பின்வரும் கூற்று நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.

இலக்கிய இலக்கணங்களில் வல்ல பெரியோர் இப்பதிப்பிலுள்ள குற்றங்களை அடியேனுக்குத் தெரிவிக்கும்படி பலமுறையும் பிரார்த்திக்கின்றேன். அன்னோர் அறிவிக்குந் திருத்தங்களைத் திரட்டி, இன்ன இன்ன வழு இன்ன இன்ன வித்துவான்களால் உணர்த்தப்பட்டனவென்று குறிப்பிட்டுத் தொல்காப்பியப் பதிப்புத் திருத்தமென்றொன்று உடனே அச்சிட்டு வெளியிடக் காத்திருக்கின்றேன். ஐம்பது புதுத் திருத்தங்களுக்கு ஒரு பிரதி என நன்றியறிவிற்கோர் அடையாளமாக அனுப்புவேன். இந்நூல் பிழையற வழங்கச் செய்தல் ஓர் பெரும் லோகோப காரமென்று உணர்வாராக

- (தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புரை, 1885)

இதன்மூலம் சி.வை.தா.வின் பதிப்பு நேர்மையினைப் புரிந்து கொள்ள முடிகிறது. இக்காலப் பதிப்புகளில் பெரும்பான்மையும் தமிழ்எண்களே தரப்பட்டுள்ளன. நூற்பா எண்கள், பக்கஎண்கள், ஆண்டு அனைத்தும் பெரும்பாலும் தமிழிலேயே அமைந்து காணப்படுகின்றது. இயலகராதி, சூத்திரவகராதி, நூற்பா அமைப்பு, உரைஅமைப்பு, எழுத்து அளவு ஆகியவை பதிப்புக்குப் பதிப்பு வேறுபடுகின்றது. உரைநடை வடிவிலேயே தொடங்கப்பட்ட முதல் பதிப்பிலிருந்து கடைசிப்பதிப்பு முற்றிலும் மாறுபட்டு ஓர் இலக்கணப் பிரதிக்கான தன்மையைப் பெற்று அமைகிறது.

19 ஆம் நூற்றாண்டுத் தொல்காப்பியப் பதிப்புகள் சிலவற்றில் விளம்பரங்கள் வெளி வந்துள்ளன. அவ்விளம்பரங்கள் நமக்குச் சில அரிய செய்திகளைத் தருகின்றன. குறிப்பாக 1868 தொல்.இளம்பூரணர் உரைப்பதிப்பில் வெளிவந்த ஒரு விளம்பரம்:

 இவை வேண்டியவர்கள் சென்னை எழூமூர்ச்சீதாப்பேட்டை வெங்குப்பிள்ளை வீத்யில் 3வது கதவிலக்கமுள்ள வீட்டில் திரிசிபுரம் சுப்பராயச் செட்டியாரிடத்திலும், திருவல்லிக்கேணியை கிராப்ட்சாலையில் 2வது கதவிலக்கமுள்ள கடையில், பாகைகட்டும் நாராயணசாமி முதலியார் குமாரர் இராமசாமி முதலியாரிடத்திலும், விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

இதேபோல் 1891இல் சி.வை.தா. தொல்.எழுத்து.நச்சினார்க்கினியர் உரைப் பதிப்பில் வெளிவந்த மற்றொரு விளம்பரம்:



 



இதன் அடியிற் குறித்த புத்தகங்கள் சென்னபட்டணத்தில் வித்தியாநுபாலனயந்திர சாலையில் ந.க. சதாசிவப்பிள்ளையவர்களிடத்துங் கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் ஊ. முத்துக்குமாரசாமிச் செட்டியாரவர்களிடத்துஞ், சிதம்பரத்திற் சைவப்பிரகாசவித்தியா சாலை விசாரணைக் கருத்தர் க.பொன்னுசாமிப் பிள்ளையவர்களிடத்தும், யாழ்ப்பாணத்தில் ஏழாலைச் சைவப்பிரகாச வித்தியாசாலை உபாத்தியாயர் சுன்னாகம் அ.குமாரசாமிப்பிள்ளை யவர்களிடத்துந், தஞ்சாவூரிற் புத்தகவியாபாரம் தா.திருவேங்கட பிள்ளையவர்களிடத்துங், கோயமுத்தூரிற் புத்தகவியாபாரம் இ. ஒன்னைய கவுண்டரவர்களிடத்தும் வாங்கிக்கொள்ளலாம்

என்ற இவ்விளம்பரங்களின் வழி 19ஆம் நூற்றாண்டுப் புத்தக விற்பன்னர்களைப் பற்றிய விரிவான தகவல்களைப் பெறமுடிகிறது. சுவடிகளிலேயே தேங்கிக்கிடந்த இலக்கண இலக்கியங்கள் அச்சு என்ற தன்மையைப் பெறும்போது அது எவ்வாறு வியாபார மையத்தை அடைந்தன, அதோடு அவற்றை வியாபாரம் செய்த விற்பன்னர்கள் யார் யார், அவர்கள் எந்தெந்த ஊர்களிலிருந்து விற்பனை செய்தார்கள், அதன்வழி அக்காலத்தில் நூல்கள் எவ்வாறு பரவலாக்கம் பெற்றன என்பன போன்ற பல்வேறு தரவுகளைப் பெற அவ்விளம்பரங்கள் துணைபுரிகின்றன.

19ஆம் நூற்றாண்டுப் பதிப்புகளை வெறும் பழைய புத்தகங்களாகப் பார்க்காமல் அப்பதிப்புகளில் புதைந்து கிடக்கின்ற பல்வேறு தரவுகளைத் திரட்டுவதன் மூலம் அக்காலப் பதிப்பு வரலாற்றை ஒரு செறிவான தன்மைக்குள் எழுதமுடியும். அக்காலத்தில் வெளிவந்த தொல்காப்பியத்தின் பலபதிப்புகள் இன்று கிடைத்தற்கு அரிதாகி விட்டநிலையில் அப்பதிப்புகளின் தரவுகளைப் பதிவு செய்வதிலேயே இக்கட்டுரை கவனம் கொண்டிருக்கின்றது. 19ஆம் நூற்றாண்டுத் தொல்காப்பியப் பதிப்புகள் குறித்து விரிவான தகவல்களைப் பெற கீழ்க்கண்ட நூல்களை, இதழ்களை வாசிக்கலாம்.

பார்வை நூல்கள்
:
1.  கிருட்டிணமூர்த்தி, கோ., தொல்காப்பிய ஆய்வின் வரலாறு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1990

2.     சண்முகம்பிள்ளை, மு., தொல்காப்பியப் பதிப்புகள், (பக்.1-70), தமிழாய்வு தொகுதி-8,    சென்னைப்பல்கலைக்கழகம், 1978

3.    சுப்பிரமணியன், ச.வே., தொல்காப்பியப் பதிப்புகள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 1992

4.  மெய்யப்பன், ச., தொல்காப்பியப் பதிப்புகள், ‘தொல்காப்பியச் சிந்தனைகள், அண்ணாமலை நகர், 1978, ப-ம். 46

5.     மதுகேசுவரன், பா., தொல்காப்பியப் பதிப்பு வரலாறு, சந்தியா பதிப்பகம், 2008.







No comments:

Post a Comment