தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Sunday, August 29, 2021

கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினியின் வல்லினம் 2.0 நூல் அணிந்துரை


தமிழ்ச்சமூகம் தாய்வழிச்சமூகமே. தாயானவளே குடும்பத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தாள் என வரலாறு சொல்கிறது. வலிமையே அவள் ஆயுதமாக இருந்தது. அந்த வலிமையைக் கால ஓட்டத்தில் மெதுமெதுவாய்ப் பறித்த ஆண் சமூகம் தலைமைப் பொறுப்பைத் தன் வசப்படுத்தி பெண்மையை மென்மையாகக் கற்பிதம் செய்து அவளை ஒரு மூலைக்குள்ளாக அடக்கி ஒடுக்கியது. பெரும் புலமையும் பேராற்றலும் கொண்டிருந்த சங்கப் புலமைகளுக்குப் பிறகு வந்தவர்களை எல்லாம் படைப்பில் பங்கேற்க விடாமல் வெறும் புனிதக் கதாப்பாத்திரங்களாக மாற்றி தன் இருப்பை எழுத்தைப் பாதுகாத்துக் கொண்டது ஆண் சமூகம். ஒரு நூற்றாண்டு அல்ல பல நூற்றாண்டுகள் இழைக்கப்பட்ட காலத்தின் ஒடுக்குமுறை. அதையும் மீறி நூற்றாண்டுகளில் ஓரிருவர் எழும்பி தம் இருப்பை அடையாளத்தை வெளிக்கொண்டுவந்தனர்.

குடும்பம், சமூகம், பெண்ணுடல் எனச் சொல்லிச் சொல்லியே காலம் காலமாக பெண்ணுக்கு நிகழ்த்தப்பட்டு வந்த கொடுமைகள் சொல்லி மாளாது. அவளின் அறிவை அடக்கி அச்சம், மடம், நாணம், பயிர்ப்பை அணிவித்து பதுமையாய் வரலாற்றில் நிற்கவைத்து வேடிக்கை பார்த்தது ஆணதிகாரம். ஓடும் காலம் உங்களுக்கானது அல்ல எங்களுக்கானதும் என மாறியது. பெண்ணுக்கு மறுக்கப்பட்டவை எல்லாம் திரும்ப எடுக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டிலேயே இந்தக் கணக்கு தொடங்கப்பட்டாலும் 21 ஆம் நூற்றாண்டிற்குள் பரந்து வளர்ந்து வானமாய் விரிந்திருக்கிறது. காலத்தில் மூதாதைகள் தொலைத்தவற்றை கடந்த காலங்களுக்குள் சென்று கவலைப்படாமல் நிகழ்காலத்திற்குள் நின்று மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறது இன்றைய பெண் சமூகம். 

இந்த மீட்டெடுப்பு ஆண்களுக்கு அதிர்ச்சியைத் தந்ததோடு அவர்களின் அதிகார எல்லைகள் அவர்கள் கண்முன்னாலேயே சரிவதை ஏற்கும் மனமற்றவர்களாகவும் மாற்றியது. மாற்றத்தை நோக்கிய சிறுபான்மை ஆண்சமூகம் இருந்ததைப் பலரின் வழியாக வரலாறு பதிவு செய்தாலும் பெரும்பான்மை ஆண்சமூகம் இந்த மாற்றத்தை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்று திக்கித் திணறுகின்றனர். அவர்களுக்கான ஒரு வழிகாட்டி நூலாக கலைமாமணி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினியின் வல்லினம் 2.0 என்னும் இந்த நூல் அமைகிறது.

உங்களுக்குச் சொல்லித் தந்த கற்பிதங்களிலிருந்து நீங்கள் எவ்வாறு வெளிவர வேண்டும் என்று நினைத்தீர்களானால் இந்த நூலை ஒருமுறையாவது வாசித்துவிடுங்கள். உங்கள் காலப் பக்கங்களில் உங்கள் மூதாதைகள் செய்த பழிகளையும் பாவங்களையும் நீங்கள் ஏற்காமல் இருக்கவேண்டுமானால் இந்த நூலை ஒன்றுக்கு மறுமுறையாவது வாசித்துவிடுங்கள். நீங்கள் உங்கள் ஆண் அதிகாரம் என்ற கட்டிலிருந்து விடுபடுவீர்கள். 

மென்மையாகவும், மெல்லினத்தின் அடையாளமாகவும் மட்டுமே சித்திரிக்கப்பட்டு வந்த பெண்ணை வல்லினத்தின் அடையாளமாக வரலாற்றின் முன் நிற்கவைக்கிறார் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி. குடும்பம், கல்வி, வேலை, சமூகம் என அனைத்திலும் மாறிவரும் பெண்களின் இருப்பை, அடையாளத்தை ஆண் எவ்வாறு உள்வாங்க வேண்டும், எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதை நமக்குப் புரியும் மொழியில் இயல்பாக எதார்த்தமாக நின்று சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். 

குறிப்பாக, திருமணமான பிறகு ஒரு பெண் எவ்வாறெல்லாம் இயங்குவாள், அந்த இயக்கத்தினை எவ்வாறெல்லாம் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் அவ்வாறு ஏற்கவில்லை என்றால் என்னவெல்லாம் நிகழும் என இன்றைய பரந்துவிரிந்த பெண் வாழ்வியலிலிருந்து ஓங்கி ஒலிக்கிறார் கவிஞர். ஆண் மட்டுமே குடும்பத்தின் சமூகத்தின் தலைமை அல்ல, பெண்ணுக்கும் அதில் சமபங்கு உண்டு அதை உணர்வதற்கும் ஏற்பதற்கும் முயற்சிசெய்தால் இனிவரும் வாழ்வு நலமாகும் என்பதையும் அழுத்தமாக முன்வைக்கிறார்.

மாறிவரும் பெண்களை ஏற்கும் மனநிலை ஆண்களுக்கு உருவாக வேண்டும் என்பதை மையப்படுத்தி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் எழுதிய இந்நூல் காலத்தின் பிரதிபலிப்பு. கல்கி இதழில் தொடந்து எழுதப்பட்ட வல்லினம் தொடரை ழகரம் வெளியீடாக ஒரு குறுநூலாக வெளியிடும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.   ஒருசேர இந்தக் கட்டுரைகளை வாசிக்கும் போது அவை எழுப்பும் கேள்விகளும் அசைக்கும் சலசலப்பும் ஏராளம். ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் அந்தக் கட்டுரையின் அடையாளமாக வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கவிதையும் இன்றைய பெண் கவிஞர்களின் வாழ்வியல் குரலாக நிமிர்ந்துநிற்கிறது. 

பெண்ணை வல்லினம் என்றே எல்லாக் கட்டுரைகளிலும் அழைக்கும் கவிஞர் ஆண்களை தம்பிகளாக என்றே விளிக்கிறார். இந்த மரியாதைச் சொல் நம்மீதான அக்கறையின் உச்சம். கடந்த போன தலைமுறைகள் மெல்லினங்கள் மீது நிகழ்த்திய சமத்துவமற்ற தன்மைகளை இனிவரும் தலைமுறைகள் வல்லினங்கள் மீது ஏவிவிடக்கூடாது என்று சொல்லாமல் ஏவிவிடமுடியாது என்பதை வலியுறுத்தியே கலைமாமணி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி தன் கட்டுரைகள் முழுதுமாக நிறைந்திருக்கிறார். எத்தனையோ கையேடுகள் உங்கள் கைகளில் இருக்கலாம். அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வல்லினம் 2.0 என்னும் கையேட்டை உங்கள் கைகளில் ஏந்துங்கள். ஆண், பெண் ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமத்துவ சமூகம் நிலைபெறும்.

கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் வல்லினம் 2.0 நூலிற்கு எழுதிய அன்புரை



மொழிபெயர்ப்பில் முகிழ்க்கும் பேரின்பம்


 

மொழிபெயர்ப்பு என்பது வரம். உலகத்தின் மனித மனங்களில் உருவாகும் அத்தனை வாழ்வியல் கூறுகளையும் எல்லா மொழியினரும் அறிந்துகொள்ள மொழிபெயர்ப்பு ஒரு திறவுகோல். உலகப் படைப்பாளிகளின் கனவு எழுத்துகளை இருந்த இடத்தில் இருந்தே நுகர்ந்துகொள்ள மொழிபெயர்ப்பு ஒரு சொர்க்கவாசல்.  மொழிபெயர்ப்பு அழகியலை மட்டும் அல்ல அரசியலையும் சொல்லித்தரும். வாழ்வியல் தத்துவங்களையும் அள்ளித்தரும் அமுதசுரபி.

காலத்தின் எல்லைகளையும் தேசத்தின் எல்லைகளையும் மொழிகளின் எல்லைகளையும் கடந்து ஒரு நதியைப் போல மொழிபெயர்ப்பு ஓடிக்கொண்டே இருக்கும். அப்படி ஓடிக்கொண்டே இருக்கும் மொழிபெயர்ப்பின் ஒரு சிறுதுளியாய் கடலின் ஓரங்கமாய் இன்று உருவாகி நிற்கிறது ஓர் அற்புதமான மொழிபெயர்ப்புத் தொகுப்பு. அதன் பெயர் “ அவன் கடவுளுக்கு நிகரானவன். மொழிபெயர்ப்பு செய்தவர் பல்லாண்டுகால மொழிபெயர்ப்பு அனுபவம் வாய்ந்த பேராசிரியர் முனைவர் செ. இராஜேஸ்வரி அவர்கள்.
ஒரு மொழியின் குறிப்பிட்ட படைப்பு அல்ல. 

உலகின் செம்மொழிகளாகத் திகழும் மொழிகள் தொடங்கி பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. ஒரு மொழித் தொகுப்பு அல்ல இது. பல மொழிகளின் கவிதைச் சங்கமத்தை இணைத்து கடலில் கலக்க முனையவைக்கும் ஓர் வழிப்பாதை. கிரேக்கம், இலத்தீன், சீனம், பாரசீகம், பிரெஞ்சு, இத்தாலி, ஜெர்மனி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்ட முப்பது கவிதைகள் இத்தொகுப்பினுள் அடங்கும். ஆங்கிலம் தவிர்த்த பிறமொழிக் கவிதைகள் வேறு ஆசிரியர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அந்த ஆங்கிலக் கவிதைகளைக் கொண்டு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் முனைவர் செ.இராஜேஸ்வரி அவர்கள்.

மொழிபெயர்ப்புக் கவிதை என்றாலே இருண்மைசூழும் என்ற நம்பிக்கை பொதுப்புத்தியில் உண்டு. அந்தப் பொதுப்புத்தியை உடைத்து மூலமொழிக் கவிதைகளைத் தமிழ் மொழிக் கவிதைகளாக இயல்பாக மாற்றித் தந்திருக்கிறார் மொழிபெயர்ப்பு ஆசிரியர். மூலமொழிக் கவிஞர்கள் பலர் உலகின் மூலைமுடுக்குகளில் அறியப்பட்டவர்கள். அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தவர்களும் அத்தகையோரே. 
கிரேக்கத்தின் புகழ்பெற்ற சாஃபோவின் முதல் கவிதையில் தொடங்குகிறது இத்தொகுப்பு. 

சாஃபோவின் கவிதைத்தலைப்பு தான் இந்நூலின் தலைப்பாகவும் அமைந்திருப்பது சிறப்பிற்குரியது. சாஃபோவைத் தொடர்ந்து மாயா ஏஞ்சலோ, வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், எவெனோஸ் முதலான உலகம் தழுவிய பல கவிஞர்களின் கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த மூலக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களாக ஹோமர் பவுண்ட், எஸ்ரா பவுண்ட், மரியானாமூர், வில்லியம் கூப்பேர், கய்தேவன் போர்ட், ஆபிரகாம், பிரெளனிங் முதலானோர் திகழ்கின்றனர். இத்தனை விதமான தன்மை கொண்ட கவிதைகளையும் தமிழில் அழகுற மொழிபெயர்த்தவர்தான் நம் பேராசிரியர் செ. இராஜேஸ்வரி அவர்கள்.

முப்பது கவிதைகள் இத்தொகுப்பினுள் இருந்தாலும் அவை நான்கு இன்றியமையாத வகைப்பாட்டிற்குள் பிரிக்கப்பட்டிருப்பது கவிதை வாசிப்போருக்குத் தெளிவைத் தருவதோடு அயற்சியைத் தராமல் பார்த்துக்கொள்கிறது. காதல், இயற்கை, வாழ்க்கை, போரும் மரணமும் என்ற நான்கு வகைப்பாடுகளில் அமைந்த இந்தத் தொகுப்பில் சங்க இலக்கியம் போலவே அதிகமான பாடல்கள் காதல்பாடல்களாகவே உள்ளன. உலகமே புறத்தைவிட அகத்தில்தான் ஆழ்ந்து கிடக்கிறது என்பதை இந்தக் கவிதைத் தொகுப்பும் நமக்கு மெய்ப்பிக்கவே செய்கின்றது. 

காதல் கவிதைப் பகுதியில் 13 கவிதைகள் அடங்கியுள்ளன. காதலின் ரசனை, அழகியல், புன்னகை, நம்பிக்கை, மூத்தோர் காதல், காதல் தனிமை, இறப்பு எனக் காதலின் பன்முகத்துவங்களை உலகக் கவிகளின் ஆன்மா வழியாக தமிழ்ப்படுத்தித் தந்திருக்கிறார் மொழிபெயர்ப்பாசிரியர். அவன் கடவுளுக்கு நிகரானவன் கவிதையில் ஒரு காதலனின் ரசனை பேசப்படுகிறது.
அவன் கடவுளுக்கு நிகரானவன்
முக முகமாக அமர்ந்து
என் இனிமையான பேச்சையும்
அழகான சிரிப்பையும்
ரசித்தான்
இதுதான்
என் மார்பைக் கலவரப்படுத்தியது.
என்று நீள்கிறது. ஒரு காதலிக்கு காதலன் கண்களிலிருந்து வழியும் ரசனை எவ்வாறு உடலெங்கும் வழிந்தோடுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது இந்தக் கவிதை.
இதே போல் மற்றொரு கவிதையில் காதலின் இழப்பு குறித்துக் கூறும் போது “ ஓடும் நதியைப் போல காதல் நழுவுகிறது (பாலத்துக்குக் கீழே) என்று குறிப்பிடப்படுகிறது. மொழிபெயர்ப்பில் இந்த நழுவல் என்ற சொல் அழகாகப் பொருந்தி அந்த வரியையே அர்த்தப்படுத்தியுள்ளது. காதலின் தனிமை குறித்த மாயோ ஏஞ்சலோ கவிதை ஒன்றின் சில அடிகளில் சொற்கள் நம்மை தனிமைக்கே கொண்டுசென்று விடுகின்றன.
நீங்கள் கவனித்துக் கேட்டால்
எனக்குத் தெரிந்த ஒன்றை
உங்களுக்குச் சொல்கிறேன்
புயல் மேகங்கள் சூழ்கின்றன
பேய்க்காற்று வீசப்போகிறது
மனித இனம் துடிக்கின்றது
அதன் புலம்பல் எனக்குக் கேட்கிறது.
யாராலும்
ஏன்
ஒருவராலும்
தனித்திருக்க இயலாது
என்ற கவிதை வரிகள் வாசிப்போரை ஈர்க்கின்றன. காதல் கவிதைகளைத் தொடர்ந்து இயற்கை எனும் பகுதியில் ஐந்து கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மரங்கள், விலங்குகள், சிறுபூச்சிகள் ஆகியவற்றைக் கொண்டு படைக்கப்பட்ட இக்கவிதைகள் தனித்துவம் வாய்ந்தவையாகத் திகழ்கின்றன.
மரங்களின் இதயம் என்னும் கவிதையின் முதல் அடியே நம்மை வியக்க வைக்கிறது.
மரம் நடுவோன் எதை நடுகிறான்
சூரியனுக்கும் பூமிக்குமான தோழனை நடுகிறான்.
என்ற இந்த அடிகளில் மொழிபெயர்ப்பாசிரியர் தோழன் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். நண்பன் எனும் வார்த்தையை விடத் தோழன் எனும் சொல் தேர்வே பொருத்தமுற நிற்கிறது. காக்கா நரி கதை நம் மண்ணுக்கு உரிய கதை மட்டுமல்ல என்பதைப் பலரும் அறியார். பல நூற்றாண்டுகள் வாழ்ந்த கதை அது. நம்மூரில் வடை என்றால் ஐரோப்பாவில் அது பாலாடைக்கட்டி. இது குறித்துப் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட கவிதையை ஆங்கிலம்  வழி நம்மூர்க் கவிதையாகவே மாற்றிவிட்டார் மொழிபெயர்ப்பாசிரியர். காக்கையை வர்ணிக்கும் நரிகளின் வார்த்தைகள் இவ்வாறு வந்து விழுகின்றன.
ஆஹா நீ என்ன கருப்பு
அழகான கருப்பு
கனிமக் கருப்பு
உன் கரைதலின் இனிமையே தனி ரகம்
நீ மெலிவாக ஒயிலாக இருக்கிறாய் 
நம் நாட்டில்
இன்னிசை இரவுப்பாடிகள்
ஏராளம் ஏராளம்
ஆனால் உன் கரைதலுக்கு அதன் ஓசை ஈடாகுமா 
என்று காக்கையின் அழகை நரி வர்ணிக்கும் வார்த்தைகள் எனிய மொழியில் இனிமையாகக் காதில் நுழைகின்றன. இயற்கையைத் தொடர்ந்து வாழ்க்கைப் பகுதியில் ஏழு கவிதைகள் இடம்பெறுகின்றன. ஆபிரஹாம் கவ்லியின் ஒரு கவிதை மனிதன் மீது அக்கறை கொள்வதைப் பற்றிப் பேசுகிறது.
உயிரோடிருக்கும்போதே
சுகங்களை அனுபவிக்கிறேன்
இடுகாட்டில் எல்லோருமே துறவிதான்
என்ற சிறந்த வரிகளைக் கொண்ட கவிதையாக இருக்கிறது. இறுதியடிதான் இந்தக் கவிதை மொழிபெயர்ப்பின் உயிர். அற்புதமான சொற்களால் கோக்கப்பட்டிருக்கிறது இந்த மொழிபெயர்ப்பின் வரி. போரும் மரணமும் பகுதியில்  நான்கு கவிதைகள் இடம்பெற்றுள்ளன். போரின் வலிகளையும் ரணங்களையும் சொல்லும் கவிதைகள். மரணத்தின் வாசனைகளைப் பேசும் கவிதைகள் என இவை அமைகின்றன.
ஆயிரமாயிரம் உடல்கள் 
வெயிலில் நாறிக் கிடந்தன
ஆனால் இதுபோன்ற காட்சிகள்
மாபெரும் வெற்றிகளில் உண்டு
இந்த முரண்தான் இந்தக் கவிதையின் மொழிபெயர்ப்பில் ஆன்மாவாய்ப் புதைந்து கிடக்கிறது. 

மொழிபெயர்ப்பு என்பது இருண்மையற்ற தன்மையில் இருக்கவேண்டும். மூலத்தைப் புரிந்து வாசகன் உள்நுழைய வாசல் திறக்கவேண்டும். எளிமையான சொற்களால் எவரின் மனங்களிலும் பரவவேண்டும். கவிதையின் ஆன்மாக்கள் ஒளிரவேண்டும். இந்த அத்தனை தன்மைகளையும் கொண்ட மொழிபெயர்ப்புத் தொகுப்பாக முனைவர் செ. இராஜேஸ்வரி அவர்களின் இந்தத் தொகுப்பு அமைந்திருக்கிறது. உலகளாவிய மொழிக் கவிகளை இவ்வாறு எடுத்து வந்து  கவிதைச்சிற்பங்களாக வடித்துத் தந்த மொழிபெயர்ப்பாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
 

அவன் கடவுளுக்கு நிகரானவன் மொழிபெயர்ப்புக்
கவிதை நூலிற்கு எழுதிய அணிந்துரை
  

தமிழ்ச் சமூக ஆவணம் – தொல்காப்பியம்



தமிழின் தொன்மையான நூல் எது என்று பலரிடம் கேட்கும்போது சரியான பதில்கள் வருவதில்லை. ஒரு மாபெரும் தொன்மைச் சமூகத்தின் அடையாளமாக மூவாயிரம் ஆண்டுகாலத்திற்கும் மேலாக வாழ்ந்து வருகின்ற நூல் குறித்த அறிதல் பொதுவெளியில் இவ்வாறு அறியப்படாமல் இருப்பது தமிழறிஞர்களின் தவிர்க்க முடியாத வருத்தங்களில் ஒன்று. தமிழில் கிடைக்கின்ற முதல் இலக்கண நூல் என்று கூறியவுடன் இன்று வரை கிடைக்கப்பெறாத அகத்தியம் கூட நினைவிற்கு வருகிறது. ஆனால் தொல்காப்பியம் என்னும் தமிழ்ச்சமூக ஆவணம் பலரின் நினைவுகளில் இருந்து தப்பிவிடுகிறது. 

யார் கேட்டாலும் அடித்துச் சொல்லுங்கள் தமிழின் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் என்று. காலத்தின் பெட்டகம், கரையான் அரிக்கமுடியாத பொக்கிஷம், அனல்வாதமும் புனல்வாதமும் தொட்டுவிடமுடியாத அழியாச் செல்வம் தொல்காப்பியம் என்று. தொல்காப்பியர் என்னும் மாமனிதர் ஒருவரின் கடுமையான உழைப்பிலிருந்து நேர்த்தியாக உருவாக்கப்பட்ட தொல்காப்பியம் தான் அதற்குப் பிறகாக எத்தனை இலக்கண நூல்களைப் பெற்றெடுத்திருக்கிறது.

மூன்று அதிகாரம், இருபத்தேழு இயல்கள் என ஓர் ஒழுங்கின் கட்டமைப்புக் குள்ளாக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட தொல்காப்பியம் 1610 நூற்பாக்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. எழுத்திற்கும் சொல்லிற்கும் மட்டுமே உலகத்தின் தொன்மை மொழிகள் இலக்கணம் வகுக்க தமிழ்ச்சமூகத்தின் அக வாழ்க்கையையும், புற வாழ்க்கையையும் ஒரு முறைமைக்குள்ளாகக் கொண்டுவந்து இலக்கணம் வகுத்தளித்துத் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்த நூலாகத் தொல்காப்பியம் திகழ்கிறது. 

இன்றைய மொழியியலாளர்கள் வியக்கும் படியான எழுத்துப் பிறப்பு குறித்து அறிவியல் முறைப்படி ஆராய்ந்து பிறப்பியல் என்னும் தனி இயலை உருவாக்கியர் தொல்காப்பியர். மனிதர்களின் உடல் மொழியைப் பகுத்து ஆராய்ந்து அந்த உடல்மொழி இலக்கியத்தில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதைக் கண்டறிய மெய்ப்பாட்டியலை வகுத்தளித்த பெருமைக்குரியவர் தொல்காப்பியர். தமிழின் தொன்மை இலக்கியங்களான சங்க இலக்கியத்தை வாசிக்க தொல்காப்பியர் உருவாக்கிய ஒரு திறவுகோல் தொல்காப்பியம். 

11 ஆம் நூற்றாண்டுத் தொடங்கி 15 ஆம் நூற்றாண்டு வரை தொல்காப்பியத்தைப் புரியவைக்க முயற்சித்த உரையாசிரியர்கள் இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகியோராவர். இருபதாம் நூற்றாண்டில் எண்ணற்ற உரையாசிரியர்கள் எளிய உரை தந்து தொல்காப்பியத்தை 21 ஆம் நூற்றாண்டிற்குக் கடத்தியவர்கள். 

1847 ஆம் ஆண்டில் ஓலைச்சுவடியிலிருந்து அச்சில் மழைவை மகாலிங்கையர் என்பவரால் நிலைபெற்ற தொல்காப்பியம் அதன் பிறகு ஏராளமான தமிழ் அறிஞர்களால் பதிப்பிக்கப்பெற்றது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை தொல்காப்பியப் பொருளதிகார இளம்பூரணர் உரையைப் பதிப்பித்து வழங்கியது கூடுதல் சிறப்பு.

உலகம் வியக்கும் நுட்பமான ஆய்வுகள், உலகம் புரிந்துகொள்ள உதவும் மொழிபெயர்ப்புகள் எனத் தொல்காப்பியம் அதன் எல்லை கடந்து இன்று பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனாலேயே தொல்காப்பியம் என்பது ஓர் இலக்கண நூல் என்ற எல்லையைக் கடந்து தமிழ்ச்சமூகத்தின் ஆவணமாக மாறியது. அந்த ஆவணத்தை இத்தனை நூற்றாண்டுகள் தலைமுறை தலைமுறையாகக் கொண்டுவந்து சேர்த்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் அந்த நூலை அடுத்து வரும் தலைமுறைகளுக்குப் பயன்படும் நோக்கில் எவ்வாறெல்லாம் கொண்டு சேர்க்கமுடியுமோ அவ்வாறெல்லாம் கொண்டுசேர்ப்பதொன்றாகவே இருக்கமுடியும். 


வேந்தர் நெறி இதழில் வெளிவந்தது...


Friday, June 4, 2021

தமிழ் இலக்கண வரலாறு (முழுமையை நோக்கிய சில விவாதக் குறிப்புகள்)

 

2006 இல் எழுதப்பட்டது. மீண்டும் தற்போது வரை வந்தவற்றைச் சேர்த்து விரிவாக்கம் செய்கிறேன்...


தமிழில் எழுதப்பட்ட பல ‘அபத்த’ இலக்கிய வரலாறுகள் போல ‘இலக்கண வரலாறுகள்’ பல தோன்றாமல் போனதற்கு காரணம் அவை பாடத்திட்டத்தில் வைக்கப்படாமல் போனதோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. தொல்காப்பியம் தொடங்கி இன்றைய இருபதாம் நூற்றாண்டு வரை பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன. அவற்றில் பலநூல்கள் நமக்குக் கிடைத்ததுபோல எண்ணிலடங்கா பல நூல்கள் அழிந்தும் போயுள்ளன. நமக்குக் கிடைத்த எல்லா இலக்கண நூல்களையும் ஒன்றுதிரட்டி அவற்றைக் கால நிலையில் முறைப்படுத்தி ஒப்பிட்டு ஆய்ந்து இதுவரை ஒரு இலக்கண வரலாறு எழுதப்பட்டுள்ளனவா? என்று நோக்கும் போது இல்லை என்றே தோன்றுகின்றது. காலம் காலமாக ஓலைச்சுவடிகள் வழியாகவே நிலைபெற்றுவந்த இவ்விலக்கண நூல்கள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சுவாகனம் ஏறி 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் முழுமைத்தன்மை அடைந்துள்ளன எனலாம்.

அச்சில் நிலைபெற்றபிறகு தமிழ் இலக்கணங்கள் இருபதாம் நூற்றாண்டில் ஒரு பரவலான வாசிப்புத் தன்மையைப் பெற்றன. இவ்வாசிப்பின் மூலமாக இக்காலகட்டத்தில் இலக்கண நூல்கள் பலவும் பல்வேறு அறிஞர்களால் பலநிலைகளில் ஆராயவும் பட்டன. இலக்கண நூல்களின் ஆராய்ச்சிகள் இவ்வாறு வளர்ச்சியடைந்து வந்தகொண்டிருந்த நிலையில் அறிஞர் சோம. இளவரசு 1963ஆம் ஆண்டு ‘இலக்கண வரலாறு’ ஒன்றை எழுதினார். இவரைப் பின்தொடர்ந்து 1985ஆம் ஆண்டு புலவர் இரா. இளங்குமரன் சோம.இளவரசு அவர்கள் சொல்லாது விட்டுவிட்ட சில செய்திகளையும், ஆராயாது விட்டுவிட்ட சில நுட்பங்களையும் சேர்த்து ‘இலக்கண வரலாறு’ என்னும் அதே தலைப்பில் மற்றொரு நூலினை வெளியிட்டார். ‘இலக்கண வரலாறு’ என்று இந்த இரண்டு நூல்களுக்கும் இவ்வறிஞர்கள் பெயர் சூட்டியிருந்தாலும் அந்நூல்கள் முழுமையானதொரு இலக்கண வரலாற்றினைச் சொல்லக்கூடிய நூல்களாக அல்லாமல் எல்லா இலக்கண நூல்களையும் அறிமுகப்படுத்தும் ‘இலக்கண அறிமுக நூல்களாகவே’ தான் விளங்குகின்றன. இவ்விர நூல்களும் இதுவரை வெளிவந்த எல்லா இலக்கணங்களையும் தனித்தனியே அறிமுகநிலையில் மட்டுமே ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளன.

இந்நூல்களில் இருந்து சற்றேவேறுபட்ட ஒரு நூலாக 1979இல் வெளிவந்த ஆ.வேலுப்பிள்ளை அவர்களின் ‘தமிழ் வரலாற்றிலக்கணம்’ நூலினைக் குறிப்பிடலாம். இந்நூலினுள் ‘‘தமிழிலக்கண நூல்கள் வரலாறு’’ என்னும் தலைப்பில் பத்து பக்க அளவில் ஒட்டுமொத்தமான ஒரு தமிழிலக்கண வரலாற்றைச் சுருக்கமாக எழுதியுள்ளார். இந்நூலின் தன்மை குறித்து இரா. சீனிவாசன் அவர்கள் ‘‘இது வரலாற்று முறையில் இலக்கணத்தைக் கூறும் புத்தகமாகும். எனவே இதில் இலக்கண வரலாற்றை எதிர்பார்க்க இயலாது’’1 எனக் குறிப்பிடுகின்றார். ஆகவே இந்த நூலும் ‘தமிழ் இலக்கண வரலாற்றைக் கட்டமைக்கத் தவறவிட்டது என்பதை நாம் உணர முடியும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகமானது 1985, 1987, 1992 ஆகிய ஆண்டுகளில் ஆறு.அழகப்பன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு ‘‘இலக்கணக் கருவூலம்’’ என்னும் தலைப்பில் மூன்று பாகங்களை வெளியிட்டது. இந்நூல்களில் மொத்தம் 34 கட்டுரைகள் அடங்கியுள்ளன. தமிழிலக்கண நூல்கள் பலவும் பலநிலைகளில் எடுத்துக்கொள்ளப்பட்டு இலக்கணங்களில் ஆழங்கால்பட்ட ஆய்வறிஞர்களால் அவை ஆராயவும்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. சிறப்பான நிலையில் இக்கருவூலத்தில் உள்ள கட்டுரைகள் ஆராயப்பட்டிருந்தாலும் அவை வழமையான முறையிலேயே தனிநூல்கள் குறித்த ஆய்வாகவே போய்விட்டன. இக்கட்டுரைகள் தனிநூல் ஆய்வு என்பதில் போற்றத்தக்கவை. ஆனால் வரலாறு என்று பார்க்கும்போது அவற்றிலிருந்து விலகியே நிற்கின்றன.

‘தமிழ் இலக்கண மரபுகள் கி.பி. 800-1400 இலக்கண நூல்களும் உரைகளும்’ என்னும் தலைப்பில் 2000த்தில் வெளிவந்த இரா.சீனிவாசன் அவர்களின் நூலானது இதுவரை தமிழ் இலக்கணங்களை நோக்கிவந்த கண்ணோட்டத்திலிருந்து விலகி புதியதொரு வரலாற்று ரீதியானப் பார்வையை முன்வைத்துள்ளது. எனினும் இந்நூலும் எல்லா இலக்கணங்களையும் எடுத்துக் கொள்ளாமல் குறிப்பிட்ட காலப்பகுதியை (கி.பி.800-1400) எடுத்துக்கொண்டு அதுகுறித்து ஆய்வையே நிகழ்த்தியுள்ளது. இது குறித்து இந்நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

‘‘இலக்கண மரபுகள் குறித்த ஆய்வுக்குத் தமிழில் தோன்றிய எல்லா நூல்களையும் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்யவேண்டும். அதுவே தமிழ் இலக்கண மரபுகளை அறிந்துகொள்ள உதவும். எனினும் காலமும் இடமும் கருதியும் முனைவர் பட்ட ஆய்வின் நோக்கத்தைக் கருத்தில் கொண்டும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி மட்டும் இங்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.’’2

கால வரையரைக்குள் வைக்கப்பட்டதால் இவ்வாய்வு நூலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே தன்னை வரைந்தெடுத்துக்கொண்டு நிற்கிறது.

இதுவரை தமிழ் இலக்கண மரபுகள் குறித்து பொதுநிலையில் நிகழ்ந்த சில ஆய்வுநூல்கள் பற்றியே இங்கு விவாதிக்கப்பட்டுள்ளன. இதே போன்று இத்துறையில் பல நூல்கள் உள்ளன. கட்டுரையின் விரிவஞ்சி அந்நூல்களின் பட்டியல் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன.

இலக்கணப் பிரிவுநிலை ஆய்வுகள்...

தமிழிலக்கணங்களைப் பொதுநிலையில் நின்று ஆய்ந்த ஆய்வு நூல்களைப் போலவே பிரிவு நிலையில் ஆய்ந்த சில நூல்களும் உள்ளன. ‘‘பிரிவு நிலை’’ ஆய்வு என்பது தமிழிலக்கணத்தின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பாட்டியல், நிகண்டு, அகராதி ஆகியவை குறித்து நிகழ்ந்த ஆய்வுகளே ஆகும்.

இவற்றில் ஒவ்வொரு துறையிலும் பல நூல்கள் தோன்றி அறிமுக நிலையிலும், கோட்பாட்டு நிலையிலும் மிகத் துல்லியமாக வரையறை செய்துள்ளன.

செ.வை.சண்முகம் அவர்களால் இயற்றப்பட்ட எழுத்திலக்கணக் கோட்பாடு, சொல்லிலக்கணக் கோட்பாடு (பாகம் 1,2,3) ஆகிய நூல்கள் எழுத்திலக்கணத்தையும் சொல்லிலக்கணத்தையும் கோட்பாட்டு அடிப்படையில் நின்று மிக விரிவாக விளக்கயுள்ளன. எழுத்திலக்கணம் மற்றும் சொல்லிலக்கணத் துறையில் முன்னோடி ஆய்வு நூல்களாக இந்நூல்கள் திகழ்ந்து வருகின்றன என்பதை நாம் மறுக்க இயலாது.

எழுத்து மற்றும் சொல்லைப்போலவே பொருளிலக்கணம் குறித்து ‘தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள் என்னும் நூல் வசந்தாள் அவர்களால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளது. இந்நூலானது பொருளிலக்கணத்தின் காலந்தோறும் வளர்ச்சியினைக் கருத்தில்கொண்டே எழுதப்பெற்றுள்ளது என்பதை அந்நூலின் வழியே நாம் அறியமுடிகின்றது.

தொல்காப்பியர் தனியொரு அதிகாரமாக வகுக்காதுவிட்ட யாப்பிலக்கணமானது பிற்காலத்தில் பெரும் வளர்ச்சி பெற்றிருப்பதை அதற்கு தோன்றிய இலக்கண நூல்களின் எண்ணிக்கையிலிருந்தே நாம் அறிய முடிகிறது. அவ்வாறாகச் சிறப்பு பெற்று வளர்ந்துவந்த யாப்பிலக்கணம் குறித்து முழுமையான நிலையில் ஆராய்ந்தவர்கள் இருவர். ஒருவர் சோ.ந.கந்தசாமி அவர்கள், மற்றொருவர் ய.மணிகண்டன் அவர்கள், சோ.கந்தசாமி அவர்கள் ‘‘தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்’’ என்னும் தலைப்பில் மூன்று பாகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூல்களானது தமிழ் இலக்கிய வகைகளின் யாப்பையும், அவற்றிற்கெழுந்த யாப்பிலக்கண நூல்களையும் ஒரு காலமுறைமையோடு ஒப்பிட்டு ஆய்ந்துள்ளது. அவ்வகையில் யாப்பிலக்கணத்துறையில் இந்நூலின் பணி என்பது போற்றத்தகுந்ததொன்றாகவே நிற்கிறது.

இவரைத் தொடர்ந்து ய.மணிகண்டன் அவர்களால் 2001ல் வெளியிடப்பெற்ற ‘தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி என்னும் நூலானது யாப்பிலக்கணத்துறையில் தனித்ததொரு பங்களிப்பினைச் செய்துள்ளது. தமிழில் முறையாகத் தோன்றி வளர்ந்து வந்த யாப்பிலக்கண மரபுகளைச் சீர்தூக்கி ஒரு முறைமையிலோடு காலவரலாற்று வளர்ச்சிப் படிநிலைகளில் வைத்து ஆராய்ந்துள்ளது. இதைப் போலவே அணியியல் துறைக்கு இரா. கண்ணன் அவர்களால் எழுதப்பட்ட ‘அணியிலக்கண வரலாறு’ இரா.அறவேந்தன் அவர்களால் எழுதப்பட்ட ‘தமிழ் அணி இலக்கணமரபும் மறுவாசிப்பும்’ ஆகிய நூல்கள் அணியியல் குறித்த ஆய்வு வரலாற்றில் சுட்டத்தகுந்த நூல்களாகவே விளங்குகின்றன.

பாட்டியல் என்னும் துறைக்கு மருதூர் அரங்கராசனின் ‘இலக்கணஅ வரலாறு பாட்டியல் நூல்கள்’ என்னும் நூலானது ஒரு முன்னோடி ஆய்வுநூலாகவே விளங்குகின்றது. பாட்டியலைத் தொடர்ந்து நிகண்டுகள் குறித்து மா.சற்குணம் அவர்களின் ‘தமிழ் நிகண்டுகள் ஆய்வு’ என்னும் நூல் நிகண்டுகளின் வளர்ச்சி வரலாறு, பதிப்பு வரலாறு, பொது அமைப்பு எனப் பலநிலைகளிலும் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து ‘தமிழ் நிகண்டுகள் வரலாற்றுப் பார்வை’ (உருவ உள்ளடக்க ஆய்வு) என்னுந் தலைப்பில் பெ.மாதையன் அவர்கள் தமிழ் நிகண்டுகள் காலந்தோறும் வளர்ந்துவந்த நிலையினை அவற்றின் சமூகப்பின்புலத்தோடும் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடும் ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார்.

நிகண்டுகளிலிருந்து தனியொருதுறையாக வளர்ச்சி பெற்ற அகராதியியல் துறையும் அறிஞர்களின் ஆய்வுப் பார்வைக்கு உட்பட்டுள்ளன. சுந்தரஞ்சண்முகனாரின் ‘தமிழ் அகராதிக்கலை’ மற்றும் வ.ஜெயதேவன் அவர்களின் ‘தமிழ் அகராதியியல்’, ‘தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு’ ஆகிய நூல்கள் இத்துறையில் தனித்த அடையாளத்தோடு நிலைபெற்றுள்ளன.

இலக்கண உரை வரலாற்று ஆய்வு...

இலக்கண நூல்கள் குறித்த ஆய்வாவது தமிழ்ச் சூழலில் குறிப்பிடத்தக்க அளவில் நிகழ்ந்துள்ளது. ஆனால் இலக்கண உரை வரலாறு தொடர்பான ஆய்வு இதுவரை குறிப்பிடும்படியாக நிகழ்த்தப்பெறவில்லை. உரைகள் குறித்த ஆய்வில் முன்னோடி ஆய்வு நூலாக இதுவரை சொல்லப்பட்டு வருகின்ற மு.வை.அரவிந்தனின் ‘உரையாசிரியர்கள்’ என்னும் நூல் ‘இலக்கண உரைகளை’ மட்டும் மையப்படுத்தாமல் இலக்கிய உரைகள், சமய உரைகள் ஆகிய அனைத்தையும் ஒன்று சேர்த்த ஒரு தொகுப்புநிலை ஆய்வாகவே அமைந்துவிட்டது. இலக்கண உரைகளை ஓர் அறிமுக நோக்கிலேயே பதிவு செய்துள்ளது. இந்நூலைத் தொடர்ந்து உரைவிளக்கு, உரைமரபுகள் போன்ற நூல்கள் இத்துறையில் எழுதப்பட்டிருப்பினும் அவை இலக்கண உரை வரலாற்று ஆய்வை மையப்படுத்தத் தவறிவிட்டன. ஆகையால் இறையனார் களவியல் உரை தொடங்கி 20 நூற்றாண்டு வரை உள்ள எல்லா இலக்கண உரைகளையும் ஒன்றுதிரட்டி கால வரலாற்று நிலையில் ஆராயப்படுதல் வேண்டும்.

இலக்கண பதிப்பு வரலாறு...

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சு உருவாக்கம் பெறத் தொடங்கிய இலக்கண நூல்கள் இன்றைய காலத்தில் ஏறத்தாழ முழுமைத்தன்மை அடைந்துள்ளன எனலாம். ஆனால் இதுவரை எந்தெந்த இலக்கண நூல்கள் எத்தனைமுறை அச்சு பெற்றன, அவற்றின் ஆண்டு விவரம், பதிப்பாசிரியர் விவரம், வெளியீட்டாளர் விவரம் நூலின் தன்மை ஆகியவை குறித்த முழுமையான அடைவொன்று இதுவரை உருவாக்கப்படவில்லை.

ச.வே.சுப்பிரமணியம் அவர்களின் ‘தொல்காப்பியப் பதிப்புகள்’ மற்றும் மதுகேசுவரன் அவர்களின் ‘நன்னூல் பதிப்பு வரலாறு (ஆய்வேடு நூலாக்கம் பெறவில்லை) ஆகிய இரண்டும் இத்துறையில் முன்னோடி ஆய்வுகளாக அமைந்துள்ளன.

இவற்றைக் கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த ‘தமிழ் இலக்கணப் பதிப்புகள்’ குறித்த அடைவு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இவ்வடைவு தயாரிக்கப்பட்ட பிறகு தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாறு கடந்த இரு நூற்றாண்டுகளில் எவ்வெத் தன்மைகளில் வளர்ந்துவந்துள்ளது என்பதை வரலாற்று நிலைப்பார்வையோடு மதிப்பீடு செய்யவேண்டும்.

தனி இலக்கண நூல் ஆய்வுகள்..

இதுவரை இலக்கண நூல்களின் பொது அமைப்பு பற்றி நிகழ்ந்த ஆய்வுகள் குறித்தும், இலக்கணப் பிரிவுகள் பற்றி நிகழ்ந்த ஆய்வுகள் குறித்தும் விவரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு இலக்கண நூலிற்கும், அவற்றின் உரைகளுக்கும் நிகழ்த்தப்பட்ட தனிநிலை ஆய்வுகள் குறித்துப் பேசப்படவுள்ளன.

தொல்காப்பியம், இறையனார்களவியல், நன்னூல், யாப்பருங்கலம், காரிகை, வீரசோழியம், தண்டியலங்காரம், நம்பி அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை இன்னும் பல இலக்கண நூல்களும், இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர் நச்சினார்க்கினியார், களவியல் உரைகாரர், மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர், சிவஞானமுனிவர் இன்னும் பலரின் இலக்கண உரைகளும் என அனைத்து இலக்கண நூல்களுக்கும் உரைகளுக்கும் தனித்தனியே பன்முக நோக்கோடு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

சிறப்பு நிலை ஆய்வுகள்...

தனி இலக்கண நூல்களின் ஆய்வுகளைத் தொடர்ந்து இலக்கண நூல்களின் உள் உள்ள சில சிறப்பான பகுதிகளும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவை சார்பெழுத்து, வேற்றுமை, பொருள்கோள், உள்ளுறை, நோக்கு, இறைச்சி, இடையியல், உரியியல், மெய்ப்பாடு என இன்னும் பல கூறுகள் சார்ந்து பல்வேறு ஆய்வுநூல்கள் எழுந்துள்ளமை கவனத்திற்குரிய ஒன்றாகும்.

மேற்சொல்லப்பட்ட ‘தனி இலக்கணநூல் ஆய்வுகள்’ மற்றும் ‘சிறப்பு நிலை ஆய்வுகள்’ சார்ந்து எண்ணிலடங்கா நூல்கள் உள்ளன. இவற்றில் சில நூல்கள் பின்னிணைப்பில் சான்றுக்காகத் தரப்பட்டுள்ளன.

இவ்வாறாக இலக்கணநூல்கள் மற்றும் அதன் உரைகள் பொதுநிலையிலும், பிரிவுநிலையிலும், தனித்த நிலையிலும், சிறப்பு நிலையிலும் ஆராயப்பட்டுப் பல்வேறு ஆராய்ச்சி நூல்கள் இத்துறைகளில் தோன்றியுள்ளன. கடந்த நூற்றாண்டில் இலக்கண ஆய்வுகள் இதுபோன்று வியக்குமளவு நடைபெற்றிருந்த போதிலும் ஒரு ஒட்டுமொத்தமான ‘தமிழிலக்கண வரலாறு’ ஒன்று இதுவரை உருவாக்கப்படாதிருப்பது நம் பேரிழப்பே.

‘‘இதுவரை தமிழில் இலக்கண வரலாறு பற்றிய கருத்தாக்கம் உருப்பெறவில்லை. இலக்கிய வரலாறு எழுதுவதில் உள்ள சிக்கல்களை, கா.சிவத்தம்பி அவர்களின் ‘தமிழில் இலக்கிய வரலாறு’ புத்தகம் எடுத்துக் கூறியது போல இலக்கண வரலாற்றுச் சிக்கல்கள் கூட விவாதிக்கப்படவில்லை. இலக்கண வரலாற்றில் அடிப்படையான காலகட்டப் பிரச்சினை கூட எழுப்பப்படவில்லை.’’ 3

என்ற இரா.சீனிவாசனின் கூற்றுத் தமிழில் இதுவரை ஒரு முழுமையான இலக்கணவரலாறு எழுதப்படாததன் நிலையையே சுட்டுகின்றது.

எதிர்காலத்தில் ஒரு முழுமையான நிலையில் இலக்கண வரலாறு எழுதப்படுவதற்கு நாம் செய்யவேண்டிய பணி என்ன? இதுவரை தமிழ் இலக்கணங்களுக்கு எழுந்த எல்லா வகையான ஆய்வு நூல்களையும், நூலாக வெளிவராத சிறப்பான ஆய்வேடுகளையும், முறையாக ஆராய்ப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் முதலில் ஒன்று திரட்ட வேண்டும். அவற்றோடு தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரை வெளிவந்துள்ள எல்லா மூல இலக்கண நூல்களையும் சேகரித்தல் வேண்டும். சேகரிக்கப்பட்ட மூலநூல்களை முதன்மை ஆதாரமாகக் கொண்டு, அவற்றிற்கு எழுந்த ஆய்வுநூல்கள், ஆய்வேடுகள், கட்டுரைகள் ஆகிய அனைத்தையும் துணைமை ஆதாரமாகக் கொண்டு ஒரு ஒட்டுமொத்தமான ‘தமிழிலக்கண வரலாறு’ எழுதப்படல் வேண்டும்.

இப்பணியானது தனியொரு நபரால் செய்யப்படக்கூடியது அல்ல. கூட்டு முயற்சியாலே இப்பணி நிறைவேறும். மைய அரசு தமிழுக்குச் செம்மொழித் தகுதி அளித்திருக்கும் இவ்வேளையில் சில அடிப்படையானப் பணிகளை நாம் ஒவ்வொரு துறையிலும் செய்ய வேண்டிய கட்டாயம் நம்முன் நிற்கிறது.

இந்திய வரலாறு, தமிழக வரலாறு எழுதுவதற்கு, அதற்காக ஒரு அறிஞர் குழுவை நியமனம் செய்து அவ்வரலாறுகள் அவர்களால் எழுதப்பட்டது போல் ‘தமிழிலக்கண வரலாறு’ எழுதப்படுவதற்கும் ஒரு சிறப்பான அறிஞர்குழு அமைக்கப்படல் வேண்டும்.

இலக்கணங்களை நன்கு கற்ற நல்ல பல ஆய்வுகளைத் தந்த வரலாற்றுப் பார்வைகொண்ட பத்து அறிஞர்களைத் தேர்வு செய்து ஒரு குழுவாக அமைத்தல் வேண்டும். அக்குழுவில் உள்ள அனைவர்க்கும் எல்லா மூலநூல்கள் மற்றும் ஆய்வுநூல்கள் கிடைக்கும்படி வழிவகை செய்யவேண்டும். அவ்வப்போது அவரவர் செய்த பணிகளை ஒன்றுகூடி விவாதித்தல் வேண்டும். இப்பணிகள் தடைபெறாமல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இப்படியான சில செயல்பாடுகளின் மூலமாக ‘தமிழ் இலக்கண வரலாறு’ எதிர்காலத்தில் ஒரு முழுத்தன்மை அடையும் வாய்ப்பு உள்ளது.

தமிழ் இலக்கண வரலாறு எழுதுவதோடு மட்டுமின்றி தமிழ் இலக்கண ஆய்வு வரலாறு, தமிழ் இலக்கண உரை வரலாறு, தமிழ் இலக்கண உரை ஆய்வு வரலாறு, தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாறு ஆகியனவும் தனித்தனியே எழுதப்பட வேண்டும். இவை அனைத்தும் எழுதப்பட்டபிறகு இவற்றை ஒன்றுதிரட்டி ‘தமிழ் இலக்கண வரலாற்றுக் களஞ்சியம்’ ஒன்றை உருவாக்க வேண்டும். இப்படி திட்டமிட்டு வேலைகளைச் செய்வோமானால் இந்த நூற்றாண்டில் தமிழ் இலக்கணத்துறையில் நாம் செய்த மிகப்பெரிய பணியாக வரலாறு நம்மை நிலைநிறுத்தும்.

அடிக்குறிப்புகள்

1. சீனிவாசன். இரா.தமிழ் இலக்கண மரபுகள் கி.பி. 800-1400

இலக்கண நூல்களும் உரைகளும், தி.பார்க்கர், சென்னை, 2000, ப.12.

2. மேலது, ப.17.

3. மேலது, ப.11.


பின்னிணைப்பு

பொதுவகை ஆய்வுகள்.

1. இலக்கணச் சிந்தனைகள் - எஸ்.வையாபுரிப்பிள்ளை

2. தமிழ்மொழி இலக்கண இயல்புகள் - அ.சண்முகதாஸ்

3. இலக்கண வரலாறு - சோம. இளவரசு

4. இலக்கண வரலாறு - புலவர். இரா. இளங்குமரன்

5. இலக்கண உருவாக்கம் - செ.வை.சண்முகம்

6. இலக்கண எண்ணங்கள் - இரா.திருமுருகன்

7. இலக்கணமும் சமூக உறவுகளும் - கா.சிவத்தம்பி

8. இலக்கண ஆய்வு - செ.வை.சண்முகம்

9. இலக்கணக் கருவூலம் (1,2,3) - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

10. மறைந்துபோன தமிழ் நூல்கள் - மயிலை சீனி. வேங்கடசாமி

11. தமிழிலக்கணக் கோட்பாடு - பொற்கோ

12. இலக்கண உலகில் புதிய பார்வை (1,2,3)

13. தமிழ் வரலாற்றிலக்கணம் - ஆ.வேலுப்பிள்ளை

14. தமிழ் இலக்கண மரபுகள் - இரா. சீனிவாசன்

கி.பி.800-1400 இலக்கண நூல்களும் உரைகளும் இன்னும் பல நூல்கள் இத்துறையில் உள்ளன.

15. தமிழ் இலக்கிய வரலாறு - மு. அருணாசலம்

(பாகம் 9 முதல் 16 வரை)


பிரிவுநிலை ஆய்வுகள்.


எழுத்திலக்கணம்.

1. எழுத்திலக்கணக் கோட்பாடு -செ.வை.சண்முகம்


சொல்லிலக்கணம்.

1. சொல்லிலக்கணக் கோட்பாடு - செ.வை.சண்முகம்

(பாகம் 1,2,3)


பொருளிலக்கணம்


1. தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள் - வசந்தாள்

2. அகத்திணைக் கொள்கைகள் - ந.சுப்புரெட்டியார்.


யாப்பிலக்கணம்


1. தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் - சோ.ந.கந்தசாமி

(பாகம் 1,2,3)

2. தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி - ய.மணிகண்டன்

3. புதிய நோக்கில் தமிழ் யாப்பு - பொற்கோ.

4. தமிழின் பா வடிவங்கள் - அ. சண்முகதாஸ்

5. யாப்பியல் - அன்னிதாமசு


அணியிலக்கணம்.


1. அணியிலக்கண வரலாறு -இரா.கண்ணன்

2. தமிழ் அணி இலக்கண மரபும் இலக்கண மறுவாசிப்பும் - இரா. அறவேந்தன்


பாட்டியல்.


1. இலக்கண வரலாறு பாட்டியல் நூல்கள் - மருதூர் அரங்கராசன்

2. பாட்டியல் ஓர் ஆய்வு - நலங்கிள்ளி


நிகண்டுகள்


1. தமிழ் நிகண்டுகள் ஆய்வு - மா.சற்குணம்

2. தமிழ் நிகண்டுகள் வரலாற்றுப் பார்வை - பெ. மாதையன்


அகராதியியல்


1. தமிழ் அகராதிக்கலை - சுந்தரசண்முகனார்

2. தமிழ் அகராதியியல் - வ.ஜெயதேவன்

3. தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு - வ.ஜெயதேவன்


இலக்கண உரைகள்


1. உரையாசிரியர்கள் - மு.வை. அரவிந்தன்

2. உரையாசிரியர்கள் - சு.அ.இராமசாமிப் புலவர்

3. உரைவிளக்கு - தமிழண்ணல்

4. உரைமரபுகள் - இரா.மோகன், நெல்லை ந. சொக்கலிங்கம்


இலக்கணப் பதிப்புகள்


1. தொல்காப்பியப் பதிப்புகள் - ச.வே. சுப்பிரமணியம்

2. நன்னூல் பதிப்பு வரலாறு (ஆய்வேடு) - மதுகேசுவரன்


தனி இலக்கண நூல் ஆய்வுகள்


தொல்காப்பியம்


1. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி - மு.இராகவையங்கார்

2. தொல்காப்பியர் காலத் தமிழர் - புலவர் குழந்தை

3. தொல்காப்பியர் காட்டும் வாழ்க்கை - ந.சுப்புரெட்டியார்

4. தொல்காப்பியக் களஞ்சியம் - க.ப. அறவாணன்

5. தொல்காப்பியக் கடல் - வ.சு.ப. மாணிக்கம்

இவை தவிர இன்னும் பல்வேறு நூல்கள்.

6. தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம் - வெள்ளைவாரணன்.


நன்னூல்


1.எழுநூறு ஆண்டுகளில் நன்னூல் - க.ப.அறவாணன்

இவை போன்று இன்னும் பல நூல்கள் இத்துறையில் இயற்றப்பட்டுள்ளன.


சிறப்புநிலை ஆய்வுகள்


1. உள்ளுறையும் இறைச்சியும் - ஆ.சிவலிங்கனார்

2. உள்ளுறை, இறைச்சி, நோக்கு - தமிழண்ணல்

3. பொருள்கோள், வேற்றுமையியல் - மருதூர் அரங்கராசன்

இன்னும் பலப்பல நூல்கள் இத்துறையில் இயற்றப்பட்டுள்ளன.


நன்றி : புதுவிசை

Friday, October 16, 2020

காலந்தோறும் தமிழ் இலக்கண நூல்கள் : அறிமுக நோக்கில்...

தமிழில் காலந்தோறும் பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றி வந்துள்ளன. அவற்றில் கால ஓட்டத்தில் மறைந்த நூல்கள் எண்ணற்றவை. கிடைக்கின்ற இலக்கண நூல்களே தமிழ் இலக்கண வரலாற்றின் வளத்தைப் பேசும்போது மறைந்துபோன நூல்கள் கிடைத்திருந்தால் தமிழின் இலக்கண வளத்தை உலகமே வியந்திருக்கும். தமிழில் கிடைக்கின்ற முதல் இலக்கண நூலாக தொல்காப்பியமே திகழ்ந்தாலும் தொல்காப்பியத்திற்கு முன்னரே பல இலக்கண நூல்கள் சிறந்து விளங்கியிருப்பதைத் தொல்காப்பியமே பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என விரிந்த தமிழ் இலக்கண மரபு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் அறுவகை இலக்கணம் ஏழாம் இலக்கணம் ஆகிய நூல்களில் புலமை இலக்கணத்தை ஆறாம் இலக்கணமாகவும் தவ இலக்கணத்தை ஏழாம் இலக்கணமாகவும் இணைத்து இலக்கண மரபின் எல்லைகளை விரித்துச் சென்றுள்ளது.

இதனை மையமாக வைத்து காலநிலைப்படி முழுமையாகக் கிடைக்கின்ற இலக்கண நூல்களைப் பட்டியலிடுவதே இந்தப் பதிவின் நோக்கம்.

Thursday, October 15, 2020

எஸ்.ஆர். எம். தமிழ்ப்பேராயம் வெளியீடுகள்

 

 


எஸ். ஆர். எம். தமிழ்ப்பேராயம் பல்வேறு இன்றியமையாத நூல்களை வெளியிட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்ப்பேராயம் பட்டயப் படிப்புகள் நடத்துதல் விருதுகள் வழங்குதல் நூல்கள் வெளியிடுதல் என தொடர்ந்து பல செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதில் நூல்கள் வெளியிடுதல் என்னும் செயல்பாட்டில் தமிழில் மிக முக்கியமான ஆளுமைகள் பலரின் நூல்களை வெளியிட்டுள்ளதோடு அரியபல நூல்களையும் தமிழ்ப்பேராயம் வெளியிட்டுள்ளது.

தொல்காப்பியம் தொடர்பான ஆய்வு நூல்கள், கலைச்சொல்லகராதி ஆகியவற்றோடு சாம்பசிவம் பிள்ளை அவர்களின் மருத்துவ அகராதியினையும் தமிழ்ப்பேராயம் வெளியிட்டுள்ளது. ஐங்குறுநூறு பத்துப்பாட்டு ஆகியவற்றின் மொழிபெயர்ப்புகளையும் தமிழ்ப்பேராயம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெளியீட்டு விவரங்கள் கீழே வழங்கப்படுவதோடு அவற்றின் சில நூல்களின் முகப்புப் பக்கங்கள் இங்கே வழங்கப்படுகிறது. தொடர்பு விவரங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

எஸ்.ஆர்.எம்.

தமிழ்ப்பேராயம் வெளியீடு 

தொடர்புக்கு: 044 27417375

தொடர்பு கொள்ள: திங்கள் முதல் சனிக்கிழமை வரை 

நேரம் 9 முதல் 5 மணிவரை

விளக்கு விருது 2019

 2019ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு





அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 24வது (2019) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு 2019 ஆம் ஆண்டின் விருதுக்குரியவர்களாக கீழ்காணும் இரு எழுத்தாளர்களை ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளது.


1. கவிஞர் கலாப்ரியா    கவிதை, நாவல், வாழ்க்கை வரலாற்றுப் புனைவுகள்,      

                       கவிதை விமர்சனம், தமிழ்த் திரையுலகம் பற்றியும் 

                       தமிழர் வாழ்வில் திரையுலகின் தாக்கங்கள் பற்றியும்   

                       ஏராளமான ஆவணப் பதிவுகள். 

2. பேரா. க.பஞ்சாங்கம்   கவிதை, நாவல், சங்க இலக்கியம் முதல் சமகால 

                       இலக்கியம் வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட 

                       ஆய்வுக் கட்டுரைகள், நவீனக் கோட்பாடுகளின் 

                       அடிப்படையிலான விமர்சன ஆய்வுகள், 

Tuesday, July 21, 2020

சோறு என்பது...

சாப்பாடு போடறதுக்குன்னு ஒரு மனசு வேணும். சங்க இலக்கியத்துல அகநானூறுல ஒருபாட்டு இருக்கு. வீட்டை விட்டு காதலனோட ஓடிப்போற தப்பு தப்பு உடன்போக்கு மேற்கொள்கிற காதலியோட வளர்ப்பு அம்மா தான் பொண்ணு போற வழியில பத்தறமா போகணும். 

அப்படி அந்த வழியைக் கடந்த பிறகு கோசர்கள் வாழுற நாட்டைப் போய் அவ சேர்ந்துட்டான்னு தனக்கு நிம்மதின்னு சொல்லும். ஏன்னா அந்தக் கோசர்கள் யார் வெறுங்கையோட வந்தாலும் அவங்கள வரவேத்து உண்ண உணவு உடுக்க உடை எல்லாம் கொடுப்பாங்களாம். அதனால தாம் பொண்ணு அங்க போய்ச் சேரனும்னு நினைக்கிறாங்க.சோறு போடறதுல ஒரு ஊரே இப்படி இருந்திருக்குனா சங்க காலத்த பொற்காலம்னு சொல்றதுல ஒன்னும் தப்பு இல்ல. 

அதுவும் வீட்டை விட்டு உடன்போக்கு நிகழ்த்தறவங்களுக்குனா சொல்லவா வேணும் அவங்களோட பெருந்தன்மையை. இன்னொரு பாட்டுல இதே மாதிரி உடன்போக்கு போற பொண்ண நீ போய் கா கான்னு கத்தி கூப்பிட்டனா காக்காவே உனக்கு நல்ல பிரியாணி செஞ்சிதரன்னு ஒரு அம்மா சொல்லும். காக்கா பிரியாணிதான் கேள்விப்பட்டு இருக்கோம். காக்காக்கே பிரியாணி நம்ம ஆளுங்களாலதான் முடியும். இது விருந்தோம்பல் மரபு. 

இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னடி வாழ்ந்தவங்களோட வரலாற வாய்கிழிய பேசற நம்ம இப்போ என்ன பண்றோம். கதவ துறந்து வைச்சி சாப்பிடறது நம்மோளட நாகரிகம்னு சொன்னது போய் சோத்து வேளையா எவனாவது சொந்தக்காரன் வந்துடப் போறான்னு கதவ அடைச்சி சாப்பிடறதுதான் நாகரிகம்னு நாமளே சொல்லிக்க ஆரம்பிச்சுட்டோம்.

 மதிய வேளையில நாங்கலாம் சேர்ந்து உக்காந்து சாப்பிடறப்ப கூட வேலை செஞ்சவர் ஜெய் இன்னைக்கு என்ன அப்பிடின்னு ஆரம்பிச்சு எல்லார் டிபன்பாக்ஸ்லயும் சுத்தி சுத்தி நாலு ரவுண்டு வருவார். முதல் நாள் அவர ஆர்வத்தோட கூப்பிட்டு எடுத்துக்கோங்கன்னு சொன்னவங்களெல்லாம் நாளாக நாளாக பின்வாங்க ஆரம்பிச்சு தங்களோட சமையல் எவ்ளோ கேவலம்னு வரைக்கும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. 

சாப்பாட்டுக்காக சண்டை போட்டு பரம்பரை பரம்பரையா பிரிஞ்ச குடும்பங்கள்லாம் இருக்கு. சின்னப்பையனா இருந்தப்ப என்னோட உறவினர் சொன்ன ஒருவார்த்தை பத்து வருஷம் அவர் வீட்டுப் பக்கமே என்ன போகவிடாம பண்ணிருச்சு. ஆனா நான் எதிர்பாக்காத என்னோட பேராசிரியர் வீட்டுக்கு எப்ப போனாலும் சோறு மட்டும் இல்லாம இருக்காது. முகமலர்ச்சியோட அவரும் சரி அவர் மனைவியும் சரி பிள்ளைகளும்சரிஎல்லாரும் சோறு போடறதுல கவனிச்சுகுவாங்க. அவர்மேல கருத்து வேறுபாடு இருக்கற பலர் கூட இந்த சோறு போடற விஷயத்துல குறை சொனனதா நினைவு இல்ல. 

சோறு போட்டவங்களும் நினைவுல நிக்குறாங்க சோறு போடதவங்களும் நினைவுல நிக்குறாங்க. இதுல நாம எங்க நிக்குறோம்னுசுத்தி ஒருமுறை பாத்துகணும் போல....